Thayagam Tamil Radio Australia

ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு

August 26, 2025

Spread the love

தாம் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை காரணமாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று (25) அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சை பெற வேண்டும் என பரிந்துரைத்தனர்.

அது தொடர்பான மருத்துவ அறிக்கையில், ரணிலின் உடல்நிலை சீராக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எனினும், அவர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதால், அவரை நீதிமன்றத்துக்கோ அல்லது வெளியிலோ அழைத்துச் செல்வது கடினம் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.