முள்ளும் மலரும்

‘முள்ளும் மலரும்’ பலரும் அறிந்த ஒரு க்ளாசிக் திரைப்படம். காளி என்கிற பாசமிகு அண்ணனாகவே ரஜினி வாழ்ந்திருப்பார். ஷோபாவும் இவருடன் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். ரஜினிக்குள் இருந்த இயல்பான நடிகனை வெளிக்கொணர்ந்ததற்காக இயக்குநர் மகேந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தன்னளவில் ரஜினிக்கே மிக திருப்தியைத் தந்த படம் இது.
அவள் அப்படித்தான்

திரைப்படக் கல்லூரி மாணவரான, ருத்ரய்யா இயக்கிய திரைப்படங்களின் எண்ணிக்கை இரண்டு மட்டுமே. அதில் ஒன்று ‘அவள் அப்படித்தான்’. இதுவரை தமிழில் உருவான மிகச்சிறந்த டாப் 10 திரைப்படங்கள் என்று ஒரு பட்டியலை தயார் செய்தால் அதில் முதல் இடத்தைப் பிடிக்கக்கூடியது. அப்படியொரு தரமான திரைப்படம்.
பிரெஞ்சு ‘நியூ வேவ்’ பாதிப்பில் உருவாக்கப்பட்டது. ‘ஆணாதிக்கமும் சுயமுனைப்பும்’ மிகுந்த பாத்திரத்தை தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக கச்சிதமாக வடிவமைத்த திரைப்படம் இதுதான்.
‘தியாகு’ என்கிற அந்தப் பாத்திரத்தை மிக சுவாரசியமாகவும் அநாயசமாகவும் கையாண்டிருப்பார் ரஜினி.
‘’டேய் மாப்ள…’’ என்று அழைத்து கமலை நோக்கி இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் பட்டாசாக இருக்கும். வெறுக்கப்பட வேண்டிய எதிர்மறை பாத்திரமாக இது இருந்தாலும் நம்மால் அப்படிச் செய்ய முடியாத மாயத்தை நிகழ்த்தியிருப்பார் ரஜினி.
ஸ்ரீப்ரியாவை கவர்ச்சியும் துடுக்குத்தனமும் நிரம்பிய நடிகையாகவே நாம் பெரும்பாலான திரைப்படங்களில் பார்த்திருப்போம். அவருக்குள் இருந்த மிகச் சிறந்த நடிகையை வெளிக்கொணர்ந்த திரைப்படம் ‘அவள் அப்படித்தான்’.
தமிழ் சினிமாவில் ‘பெண் மையத் திரைப்படங்கள்’ இப்போது கூட அபத்தமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அந்தக் காலத்திலேயே நாயகியின் பாத்திரத்தை மையமாக வைத்து உருவானது. மிகவும் சிக்கலான ‘மஞ்சு’ என்கிற பாத்திரத்தை ஸ்ரீப்ரியா அட்டகாசமாக கையாண்டிருந்தார்.
அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்தாலும், இப்படியொரு எதிர்மறையான பாத்திரத்தை ஏற்கவும், அறிமுக இயக்குநரோடு கைகோர்க்கவும் ரஜினி தயங்கவில்லை. கமலைப் போல ரஜினிக்கும் தமிழில் புதிய மாற்று முயற்சிகள் வெளிவருவதற்கு விருப்பம் இருந்தது. அதற்காக தன்னால் இயன்ற விஷயங்களை செய்து கொண்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் இவை.
தப்புத் தாளங்கள்

விளிம்புநிலை சமூகத்தின் மனிதர்களை பிரதான பாத்திரங்களாக அமைப்பதில் பாலசந்தரின் துணிச்சலுக்கு ஈடு கிடையாது. அந்த வகையில் ‘தப்புத் தாளங்கள்’ திரைப்படத்தில் ரஜினி ரவுடியாகவும் சரிதா பாலியல் தொழிலாளியாகவும் நடித்திருந்தார்கள். ஒரு சில்லறை ரவுடியின் பாத்திரத்தை மிகச் சிறப்பான முறையில் கையாண்டிருந்தார் ரஜினி.
ஆறிலிருந்து அறுபது வரை

ஒரு குடும்பத்தில் மூத்த அண்ணனாக பிறந்து அந்தக் குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் சென்டிமென்ட் படம்தான். ஆனால், உறவுகளின் நிராகரிப்பையும் அதன் கசப்பையும் நிஜ வாழ்க்கையில் அனுபவித்தவர்கள், மனதளவில் நெருக்கமாக உணரக்கூடிய பல காட்சிகள் இதில் உண்டு. ரஜினியின் ‘கமர்ஷியல்’ திரைப்படங்களை இயக்கிய அதே எஸ்.பி. முத்துராமனா, இதையும் இயக்கினார் என்று ஆச்சரியமாக இருக்கும்.
மூன்று முடிச்சு

நண்பனின் காதலியை அடையத் துடிக்கும் வில்லன் பாத்திரம் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினிக்கு அமைந்திருந்தது. தனக்குப் பிடித்த பெண், நண்பனை விரும்புகிறாளே என்கிற மனப்புழுக்கத்தையும் நண்பனின் மீதான வெறுப்பையும் வன்மத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி.
புவனா ஒரு கேள்விக்குறி

ரஜினியை வணிக நாயகனாக வடிவமைத்ததில் முக்கிய பங்கு இருக்கும் அதே எஸ்.பி.முத்துராமன்தான், அவரை வேறு விதமான குணச்சித்திர பாத்திரங்களிலும் அற்புதமாக காட்டியுள்ளார். இந்த வரிசையில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ மிக முக்கியமான திரைப்படம்.
காதலியின் பிரிவு, நண்பனின் துரோகம், தனிமையின் கொடுமை போன்ற உணர்ச்சிகளை மிக அருமையாக இந்தத் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி. சிவகுமார்தான் இந்தப் படத்தின் ஹீரோ என்றாலும் ரஜினிதான் ஹீரோவாக தெரிவார். பாத்திர தேர்வில் ஏற்பட்ட சறுக்கல் குறித்து சிவகுமாரே பின்னாளில் வருந்தினார்.
‘ஜானி’

ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனுக்குள் இருக்கும் ஒரு மென்மையான காதலனை ‘ஜானி’ திரைப்படத்தில் அற்புதமாக பதிவு செய்தார் மகேந்திரன். இதில் முற்றிலும் புதுவிதமான ரஜினிகளைப் பார்க்கலாம். ஆம், இதில் இரட்டை வேடம்.
தில்லு முல்லு

நகைச்சுவைக் காட்சிகளை தன்னால் கையாள முடியுமா என்கிற சந்தேகம் ரஜினிக்கே உள்ளூற நிறைய இருந்தது. இந்தச் சந்தேகத்தை உடைத்தெறிந்த பெருமை பாலசந்தரையே சாரும். அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த ரஜினியின் பிம்பத்தை ‘தில்லு முல்லு’ திரைப்படத்தின் மூலம் மாற்றியமைத்தார் பாலசந்தர். இதற்குப் பிறகான திரைப்படங்களின் காமெடி காட்சிகளில் ரஜினி தன்னம்பிக்கையுடன் நடித்ததற்கு அஸ்திவாரம் போட்ட திரைப்படம் இதுதான்.
நெற்றிக்கண்

சபலக்கார கிழவராக ஒரு ரஜினி, அவரைத் திருத்த முயலும் மகனாக இன்னொரு ரஜினி. இப்படியொரு கலாட்டாவான காம்பினேஷில் உருவான திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இதில் வயதான பாத்திரத்தில் ரஜினி செய்திருக்கும் அலட்டலான நடிப்பு சுவாரஸ்யமானது.
தளபதி

தனது புத்துணர்ச்சியான திரைமொழியின் மூலம் தமிழ் சினிமாவின் நிறத்தையே முற்றிலும் மாற்றியமைத்தவர் மணிரத்னம். அப்படியொரு இயக்குநரும் ரஜினியும் இணைந்தால் அந்த காம்பினேஷன் எப்படியிருக்கும்? விளைவு ‘தளபதி’. ரஜினியின் பிம்பத்திற்கு அதிக சேதாரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மணிரத்னம் சற்று கீழே இறங்கி வந்திருந்தாலும் தன்னுடைய தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்கவில்லை.