இலங்கை அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வுப் பிரிவுகள் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே, இவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலானவை அதிகாரப் பகிர்வையே விரும்புகின்றன என்றும், இதுகுறித்து வடகிழக்கு தமிழ் பிரமுகர்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவுடன் தமிழ் கட்சிகள் தங்களது ஈடுபாட்டையும் தூண்டவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஏதிலிகள் தொடர்பிலும் கவனம் தேவை
இந்தியாவில் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான சட்டத் தடைகளைச் சீர்திருத்தி, அவர்களின் மீள்வரவை எளிதாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.
இலங்கை அரசியலில் தற்போது ஜனாதிபதி உள்ளிட்ட பல தரப்புகள் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளனர் என்றும், இது அவர்களது பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.
அதிகாரப்பகிர்வானது நாட்டை மேலும் ஒற்றுமைப்படுத்தும் என்பது தன்னுடைய நிலைப்பாடாகும் எனவும் அவர் விளக்கினார்.
முன்னாள் புலிகள் மீது குற்றச்சாட்டு
இதேவேளை, அதிகாரப்பகிர்வை தமது கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆதரிக்கின்றது என்றாலும், தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களுக்காக உண்மையான முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும், வரலாற்று பொறுப்பை சுமத்தும் வகையில் வரதராஜ பெருமாள் குற்றம் சுமத்தியுள்ளார்.