பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் செவ்வாயன்று (25) பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், நடந்துகொண்டிருக்கும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டின் போது ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பணிகளைச் செய்ய மறுத்ததற்காக அவர்கள் பணி நீக்கப்பட்டதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸார், காவல்துறையின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்புடையவர்கள்.
பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி,
100 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் பணிக்கு வராமல் இருந்ததற்காக தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பலர் சாம்பியன்ஸ் டிராபியின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய மறுத்துள்ளதாக கூறினார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடமைகளை ஏன் செய்ய மறுத்தார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிப்படுத்தப்படவல்லை.
எனினும், பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸார் அதிக நேர பணி சுமைகளின் காரணமாக கடமை தவறியதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
நியூசிலாந்து, இந்தியாவிடம் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதற்கிடையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை மத்திய தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் நிராகரித்துள்ளார்.
திங்களன்று ஜியோ செய்திக்கு அளித்த செவ்வியில் அவர்,
பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அமைதியாகவும் திறமையாகவும் நடத்துகிறது என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எங்கள் மைதானங்கள் நிரம்பிவிட்டன, உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர், மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் உள்ளது, எங்கள் தெருக்கள் கிரிக்கெட்டின் வெற்றியைக் கொண்டாடும் மக்களால் நிரம்பியுள்ளன – என்று குறிப்பிட்டார்.