சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பிள்ளையார்பட்டி உட்பட சில பகுதிகளில் `பராசக்தி’ படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தும் புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் வைரலாகப் பரவியது.
மதுரையில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம்.
இதனை இயக்குநர் சுதா கொங்கராவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்திருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ‘இந்தக் கிரகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடமான மதுரையில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவிருக்கிறதாம். நேற்று (23) செய்தியாளர்களைச் சந்தித்தப் பேசிய ரவி மோகன் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
அவர், ‘முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவிருக்கிறது. இலங்கைக்கு மிக விரைவில் நாங்கள் செல்லவிருக்கிறோம்.’ எனக் கூறியிருந்தார்.
ப்ரீயட் கதைகளத்தில் உருவாகும் இப்படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம்தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.