Thayagam Tamil Radio Australia

சட்டக் கல்லூரி அனுமதி சர்ச்சை: நாமல் ராஜபக்ஷ மீது இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

November 25, 2025

Spread the love

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டக் கல்லூரி அனுமதி தொடர்பில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகளின் சக்தி எனும் அமைப்பே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்களை வெளியிட்ட இணையத்தளம் ஒன்றின் அடிப்படையில், நாமல் ராஜபக்ஷ 2009 ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரிக்குச் சேரத் தேவையான கல்வித் தகுதியைப் பூர்த்தி செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பட்டம் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகம், அவர் சேர்ந்த நேரத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. அது விதிமுறைகளை மீறிய செயல் என்றும், இது ஊழல் என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, அவர் விண்ணப்பம் சமர்ப்பித்த அன்றே சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் பட்டம் பெற்ற லண்டன் சிட்டி பல்கலைக்கழகம், அவர் சேர்ந்த பிறகு சுமார் மூன்று வாரங்கள் கழித்து தான் சட்டக் கல்லூரியால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், நாமல் ராஜபக்ஷவின் சட்டக் கல்லூரி ஆவணக் கோப்பில் பட்டச் சான்றிதழ் இல்லை என்றும், மூன்றாம் வகுப்புப் பட்டம் பெற்றதற்கான ஒரு பதிவு மட்டுமே உள்ளது என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

எனினும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே தனது தகுதிகளைச் சரிபார்க்க விசாரணை நடத்தியதாகவும், ஆனால் பல மாத விசாரணைகளுக்குப் பிறகும் நீதிமன்றத்தில் எந்தவொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.