Thayagam Tamil Radio Australia

கீரிமலையில் கடற்படை ரேடார் அமைக்க கோரிய காணி வழங்க மறுப்பு

October 17, 2025

Spread the love

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரிய இரண்டு ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுதியான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானம், வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) சபை மண்டபத்தில் நடைபெற்றபோது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அமர்வின்போது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர், “போதைப்பொருள் ஒழிப்புக்காக ரேடார் அமைப்பதே நோக்கம், காணி உரிமையாளர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். இதனை அரசியல் பிரச்சினையாக ஆக்க வேண்டாம்” எனக் கூறினார்.

எனினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள்,

“போதைப்பொருள் ஒழிப்புக்கும் காணி சுவீகரிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ரேடார் அமைப்பதற்கு இரண்டு ஏக்கர் தேவையில்லை.
மக்கள் காணி மக்களுக்கே; அதனை அரசுக்கு வழங்க முடியாது”
என வலியுறுத்தினர்.

மேலும், பிரதேச சபை மற்றும் மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானம், மக்களின் நில உரிமையை பாதுகாக்கும் ஒரு முக்கியமான அரசியல் நடவடிக்கை எனவும் பலர் பாராட்டுகின்றனர்.