வடக்கு மாகாணத்தின் நிலமை மற்றும் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்கள் குறித்து அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கு, மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் முக்கியமான விவரங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பு, முதலீட்டாளர்களின் ஆர்வம், மற்றும் இளையோரிடையிலான போதைப்பொருள் பாதிப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
அரசாங்கத்திற்குத் தவறான தகவல்களை சில அதிகாரிகள் வழங்குவதால், மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் கவலை தெரிவித்தார். குறிப்பாக, வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம், கூகுள் வரைபடத்தின் அடிப்படையில் மக்களின் விவசாயக் காணிகளை அதிகாரிகளுக்கு தெரியாமலே வர்த்தமானியில் பிரசுரித்திருப்பது மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மீள்குடியமர்வும், மூலதன முதலீட்டு திட்டங்களும், புனர்வாழ்வு நிலையங்களும் ஆகியவை அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகளாக உள்ளன என்றும், ஆட்சிமாற்றத்திற்குப் பின் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார். வடக்கில் மூன்று முதலீட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன என்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பிலும் ஆளுநர் கவலை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இறுதியில், ஆளுநர் தூதுவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார். சந்திப்பில் ஆளுநரின் செயலாளர்கள் மற்றும் இணைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.