Thayagam Tamil Radio Australia

எலும்புக்கூடுகளைத் தேடுவதல்ல, இதயங்களை குணப்படுத்துவதே அவசியம் – விமல் வீரவன்ச

July 2, 2025

Spread the love

செம்மணி புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் தொடர்ந்தாலும், கடந்த காலத்தை மட்டும் தேடுவதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மறுபடியும் நிகழாதவாறு சமூகத்தை குணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஜூலை 1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“செம்மணி அகழ்வுப் பணிகள் முடிவடையும்வரை உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியாது. அடுத்த கட்ட அகழ்வில் இராணுவத்தின் இலக்கத்தகடு போன்ற முக்கிய ஆதாரங்கள் மீட்கப்பட்டால், விசாரணை வேறு திசைக்குப் போகும்,” என்று தெரிவித்தார்.

இலங்கை ஒரு போர் நடத்தப்பட்ட நாடு என்பதைக் குறிப்பிடும் அவர்,

“புதைகுழி உள்ள இடமும் போர் நடைபெற்ற பகுதியே. அங்கிருந்த அனைத்து தரப்புகளாலும் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன. எனவே, எந்த தரப்பால் மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மட்டும் நாம் இன்னும் அறிந்துகொள்ளவில்லை,” என கூறினார்.

மேலும்,

“உயிரிழந்த மக்களின் எலும்புகளை தோண்டிப் பழையவற்றை மட்டும் தேடுவதிலிருந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இதயங்களை குணப்படுத்தும் முயற்சிகள் மிக அவசியமானவை. ஆனால் இப்போது அந்த பாதையை விடுத்து, வைராக்கியம் விதைக்கப்படுகிறது. சர்வதேசம் மற்றும் சில அடிப்படைவாத குழுக்களின் நோக்கம்தான் இது,” என விமல் வீரவன்சா வலியுறுத்தினார்.