பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய தொலைக்காட்சி சேவையான i24-இன் நேர்காணலில் உரையாற்றிய அவர், பயங்கரவாதம் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் எனக் கூறியதுடன், இந்த சவாலுக்கு எதிராக நாடுகளுக்கு இடையிலான ஆழ்ந்த ஒத்துழைப்பு தேவை என்றும் கூறினார்.
அண்மையில் ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.
2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடைய ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரெஹ்மான் லக்வி போன்ற முக்கிய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு இன்னும் பாதுகாத்து வருகிறது எனக் குற்றம் சாட்டினார். “பல யூதர்களும் உயிரிழந்த அந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் இன்றும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதே நேரத்தில், 26/11 தாக்குதலின் மூளையாகக் கருதப்படும் தஹாவூர் ஹுசைன் ராணாவை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது போல, மற்ற பயங்கரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் “ஆப்ரேஷன் சிந்தூர்” தற்போதைக்கு இடைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது; ஆனால் அது முடிவடைந்ததாக அல்ல என்றும் தூதர் ஜே.பி. சிங் தெளிவுபடுத்தினார்.