Thayagam Tamil Radio Australia

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை முன்னிட்டு அடித்து உடைக்கப்படும் இந்திய படகுகள்

August 31, 2025

Spread the love

மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனங்கள் மூலம் அடித்து உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட போதெல்லாம், அவர்களின் படகுகளை கடற்படையினர் கைப்பற்றி மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைத்திருந்தனர். தற்போது 124 படகுகள் அங்கு உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பில் சில தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 33 படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 07 படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏனைய படகுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, அரசுடமையாக்கப்பட்ட 33 படகுகளையும் உடைத்து அச்சுவேலி தொழில்பேட்டைக்கு எடுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேவேளை, நீதிமன்றம் விடுவித்த 07 படகுகளையும் அதன் உரிமையாளர்கள், கடந்த 25ஆம் திகதி தமிழகத்திலிருந்து வந்து, கடற்படையினரின் பாதுகாப்புடன் பார்த்துச் சென்றுள்ளனர்.