இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற்று வருகின்றன. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருக்கும் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இதே மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்று இருக்கிறது.
மறுபுறம் பாகிஸ்தான் அணி கராச்சியில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இருக்கிறது. பாகிஸ்தான் பெற்ற தோல்வி ஒருபுறம் இருக்க, இந்திய அணி தான் ஏற்கனவே ஆடிய மைதானத்தில் ஆடுவதால் அது இந்திய அணிக்கு மற்றொரு சாதகமாக பார்க்கப்படுகிறது.
வானிலையைப் பொறுத்தவரை இந்தியா – வங்கதேசம் போட்டியின் போது இருந்த அதே சூழ்நிலையே நிலவும் எனவும், பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
துபாயில் பொதுவாகவே மந்தமான பிட்ச் மட்டுமே இருக்கும். அங்கே முதல் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அதன் பின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அதே போன்ற பிட்ச் தான் இந்தியா – ப்[பாகிஸ்தான் போட்டிக்கும் அளிக்கப்பட உள்ளது.
இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி ஓரளவு ரன் சேர்க்க முடியும். இரண்டாவதாக பேட்டிங் செய்வது சற்று கடினமாக உள்ளது. முன்னதாக இரண்டாவதாக பந்துவீசும் அணி பனிப்பொழிவு காரணமாக பந்து வீசுவதில் சிரமம் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், இந்தியா – வங்கதேசம் மோதிய போட்டியில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே, துபாயில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் அதிக சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது சாதகமான ஒன்றாக உள்ளது.