Thayagam Tamil Radio Australia

“இந்தியா தர்மசத்திரம் அல்ல” – இலங்கைத் தமிழரின் புகலிடம் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

May 20, 2025

Spread the love

இந்தியாவில் புகலிடம் கோரிய இலங்கைத் தமிழர் சுபாஸ்கரனின் மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சுபாஸ்கரன், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2015ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் விசாரணை நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, 2022ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அந்த தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. தண்டனை காலம் 2025இல் முடிவடைகிறது.

தண்டனை முடிந்த பிறகு, அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவை எதிர்த்தும், இந்தியாவில் தங்க அனுமதி கோரியும் அவரது மனைவி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அமர்வு விசாரணையின் போது, நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் கே. வினோத்சந்திரன் கூறியதாவது:

“உலகம் முழுவதிலிருந்து அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டியதில்லை. இந்தியா தர்மசத்திரம் அல்ல. ஏற்கெனவே 140 கோடி மக்கள் இருக்கிறார்கள். இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால், வேறு நாட்டுக்குச் சென்று புகலிடம் கோருங்கள். இந்தியாவில் தொடர்ந்தும் தங்கும் உரிமை உங்களுக்கு இல்லை.”

சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ள நிலையில், சுபாஸ்கரன் இந்தியாவில் தங்குவது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.