கிறிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகுவதாக இரண்டு நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன குறித்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
சனத் பாலசூரிய மற்றும் பொத்தல ஜெயந்த என்ற இரண்டு நபர்கள் தனக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட இரண்டு பதிவுகளைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதி இன்று முற்பகல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.
எனினும் தாமும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவும் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, பொருத்தமான நீதிபதி ஒருவரைப் பெயரிடுவதற்காகக் குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும், சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் சமீபத்தில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.