வாழ்க்கை“தியானம் செய்வதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்” என்று துறவியிடம் ஒருவர் கேட்டார். ‘‘ஒன்றுமில்லை” என்று சொல்லிச் சிரித்தார் துறவி. ‘‘பிறகு இதை நீங்கள் செய்வதன் அர்த்தம் என்ன?” என்று அவர் மீண்டும் குழப்பத்துடன் கேட்டார். ‘‘தியானத்தின் மூலம் நான் எதையெல்லாம் இழந்தேன் என்று அறிந்துகொள். கோபம், மன அழுத்தம், துயரம், உடல் உபாதைகள், முதுமை குறித்த மனச்சுமை, மரணம் குறித்த அச்சம்… எல்லாவற்றையும் இழந்திருக்கிறேன். ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்” என்றார் துறவி.
இப்படி ஒரு ஜென் கதை உண்டு. தங்கள் தொழிலை, பணியை, வியாபாரத்தை, தாங்கள் செய்யும் எதையும் ஒரு தியானம் போலக் கருதும் மனிதர்கள் மகிழ்ச்சியை அதிகம் பெறுகிறார்கள்.
கடவுளின் வருகை குறித்து கவியரசு கண்ணதாசன் அருமையான பாடல் எழுதியிருக்கிறார். ‘கடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம். கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம். ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான், ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்’ என்று நீளும் அந்தப் பாடல்.
வாழ்க்கை ஒருவருக்கு இனிமையாகவும் இன்னொருவருக்குக் கொடுமையாகவும் இருக்கிறது. சில நாள்களில் இந்த நிலை மாறும். கொடுமை என்றவர் ‘இனிமை’ என்பார். இனிமை என்றவர் ‘கொடுமை’ என்பார். இது மாறி மாறி நிகழ்ந்தபடி இருக்கும். அப்படியானால் எல்லா நேரங்களிலும் மனிதன் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியாதா என்று கேட்டால், முடியும்.’ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
அனைவரும் மகிழ்ச்சியாக வாழத்தான் பூமிக்கு வந்திருக்கிறோம். ஆனால், வாழ்கிறோமா என்றால் இல்லை. ‘இருப்பதற்கு என்றுதான் வருகிறோம். இல்லாமல் போகிறோம்’ என்றார் கவிஞர் நகுலன். அதையே இப்படிச் சொல்கிறேன். ‘வாழ்வதற்கு என்றுதான் வருகிறோம். வாழாமல் போகிறோம்.’ வாழ்க்கை ஆனந்தமயமானது. வாழத்தெரிந்தவர்கள் எப்போதும் அதை ஆனந்தமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.ஆனந்தமயமானது. வாழத்தெரிந்தவர்கள் எப்போதும் அதை ஆனந்தமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
நீங்கள் வாழும் நாடு எதுவாக இருந்தாலும், அங்கிருக்கும் சட்டங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். சட்டங்களை மீறினால் தண்டனை நிச்சயம். சாலையில் செல்பவர், வணிகம் செய்பவர் என ஒவ்வொருவரும் எதைச் செய்தாலும் அதற்கான விதிகளை அறிந்திருக்க வேண்டும். ‘விதிகளை அறியாததால் மீறிவிட்டேன்’ என்று ஒருவர் சொன்னால் அதை சட்டம் ஏற்காது, தண்டனை நிச்சயம்.
அப்படித்தான் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ வந்திருக்கிறோம். இந்தப் பிரபஞ்சத்துக்கான சட்டம் ஒன்றுள்ளது. அதை அறிந்து, மதித்து, வாழப் பழகினால் வாழ்க்கை ஆனந்தமாகும். அது தெரியாததால்தான் பல தவறுகளைச் செய்து வாழ்வைத் துயரமானதாக மாற்றிக்கொள்கிறார்கள் பலர்.
மகிழ்ச்சி என்பது நிகழ்காலம் தொடர்புடையது. பலருக்கும் கடந்த காலம் குறித்த வருத்தமும், எதிர்காலம் குறித்த பயமும், நிரந்தரமாக உள்ளது. நிகழ்காலம் என ஒன்று இருப்பதையே மறந்துபோகிறோம். நிகழ்காலத்தைத் தவறவிடும்போது வாழ்க்கை மகிழ்ச்சியைத் தவறவிடுகிறது. கவலைகளும் பயங்களும் ஆசைகளும் பின்னிய வலைகளுக்குள் மனம் சிக்கி மூச்சுத் திணறுகிறது.
‘‘அதுசரி குருஜி, ஆனால் பிரச்னைகள் இருக்கின்றனதானே… அவற்றை எப்படி மறப்பது? எப்படி கவலைப்படாமல் இருப்பது?” என்று பலரும் கேட்பார்கள். ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒருவர் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போகிறார். பரபரப்பான ஆட்டம் உச்சக்கட்டத்தை நெருங்குகிறது. கடைசி ஓவர்… 6 பந்துகளில் 22 ரன்கள் அடித்தால் இந்தியா ஜெயித்துவிடும். அந்த நபர் சீட் நுனிக்கே வந்துவிட்டார். ஒவ்வொரு பந்து வீசப்படும்போதும் அவரின் இதயத்துடிப்பு எகிறுகிறது. முதல் பந்து பவுண்டரிக்குப் பாய்கிறது. அவருக்குப் பரவசம் கூடுகிறது. அடுத்த பந்தில் சிக்ஸர்… உற்சாகக் கூச்சல் விண்ணைப் பிளக்கிறது.
அந்த நேரத்தில் அவர் மனத்தில் ஆபீஸ் ஞாபகம் இல்லை, கடன் குறித்த மன உளைச்சல் இல்லை. மனைவி, பிள்ளைகள், கடமைகள் என எதுவுமே நினைவில் இல்லை. உண்மையில் அவருக்குப் பிரச்னைகள் எதுவும் இல்லாமலில்லை. மேட்ச் தொடங்கும்போது இருந்த பிரச்னைகள் இன்னும் அப்படியேதான் உள்ளன. ஆனால் அவருக்கு அவை எதுவும் அப்போது நினைவில் இல்லை. அடுத்த பந்து என்ன ஆகும்? சிக்ஸரா, பவுண்டரியா அல்லது விக்கெட் விழுந்துவிடுமா என்பதில்தான் கவனம் இருந்தது.
நிகழ்காலத்தில் ‘அடுத்த கணம் என்ன’ என்பது தெரியாதபோது பரவசம் அதிகமாகிறது. அவர் மனத்தில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால் அவரோ மனம் இல்லாத நிலைக்குச் சென்றுவிட்டார். உண்மையில் அவருக்கு இந்தப் பரவச நிலையைக் கொடுத்தது கிரிக்கெட் மேட்ச்சா என்றால் இல்லை. அந்த ஓவர் வீசப்படும் ஐந்து நிமிடங்களும் கிரிக்கெட் மேட்ச் ஒரு கருவியாக இருந்து அவரைப் பிடித்து நிறுத்தியிருக்கிறது. மனத்தைச் செயல்படவிடாமல் நிறுத்திவிட்டது.
அந்த ஓவர் முடிந்ததும் பரவசமும் முடிவுக்கு வந்தது. அடுத்த கணம் மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. நாளைய ஆபீஸ் மீட்டிங், அடுத்த வாரம் திருப்பித் தர வேண்டிய கடன், பையனின் தேர்வு முடிவு என்று கவலைகள் அடுக்கடுக்காகப் புறப்பட்டுவந்து அவரைத் தாக்கத் தொடங்கிவிடுகின்றன.
‘கிரிக்கெட் மேட்ச்தான் தனக்குப் பரவசத்தைத் தந்தது’ என்று நினைக்கிறார் அவர். உண்மை அதுவல்ல. அந்த நேரத்தில் அவர் தன் விழிப்புணர்வை நிகழ்காலத்தில் வைத்திருந்தார். அதேபோன்று நிகழ்காலத்தின் ஒவ்வொரு செயலிலும் தன் விழிப்புணர்வை வைத்திருக்கத் தெரிந்துவிட்டால் வாழ்க்கை எப்போதும் ஆனந்தமாக மாறிவிடும்.
எப்படி நிகழ்காலத்தில் விழிப்புணர்வை வைத்திருப்பது? மனம் இல்லாத நிலைக்குச் செல்வது? வாருங்கள்… வாழ்வின் அற்புத ரகசியங்களை ஒவ்வொன்றாக அறிந்துகொள்வோம்.
குரு மித்ரேஷிவா…