இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.
அபு ஒபைடா, ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் நீண்டகால செய்தித் தொடர்பாளர் ஆவார். அவர் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் வீடியோ பதிவுகளிலும் முகமூடி அணிந்தவராக தோன்றுவதால் அறியப்பட்டவர்.
எனினும், அவரது மரணத்தை ஹமாஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதேவேளை, சனிக்கிழமையிலிருந்து நடைபெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. இவர்களில் பெரும்பாலோர் காசா நகரத்திலிருந்தே வந்தவர்கள் என கூறப்படுகிறது.
காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான போரில் இதுவரை 63,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலோர் பொதுமக்கள் என ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.