சோஷியல் மீடியாவில் இருந்தால் நிச்சயம் இந்த கிப்லி ஆர்ட் போட்டோக்களைப் பார்க்காமலிருந்திருக்க மாட்டீர்கள். திடீர் திடீர் என ஏதோவொன்று தினமும் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த சோஷியல் மீடியா யுகத்தில், இப்போதைய வைரல் இந்த கிப்லி ஆர்ட்தான்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் ஆச்சரியமூட்டும் அப்டேட்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இப்போது சாதாரண டிஜிட்டல் போட்டோவை நொடிப்பொழுதில் கிப்லி ஆர்ட் எனும் அனிமேஷன் புகைப்படமாக மாற்றிக் கொடுக்கும் அப்டேட் வந்துள்ளது.
டிஜிட்டல் போட்டோவில் இருக்கும் தரவுகளை வைத்து, போட்டோவை அனிமோஷன் ஆர்ட்டாக மாற்றிக் கொடுக்கிறது AI. ஓபன் Ai நிறுவனத்தின் Chat GPT-யில் டிஜிட்டல் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘Generate this image in the style of Studio Ghibli’ என டைப் செய்தால்போதும், எந்தவொரு டிஜிட்டல் போட்டோவையும் அழகாக ஜப்பான் ஸ்டைல் கிப்லி ஆர்ட் அனிமேஷனாக வரைந்து தந்துவிடுகிறது.
Chat GPT மூலமும், தற்போது எலான் மஸ்கின் எக்ஸ் வலைத்தளம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ‘Grok’ ஆப்பை பயன்படுத்தியும் எந்தவித கட்டணமுமின்றி இந்த கிப்லி ஆர்ட்டை செய்துவிடலாம்
கிப்லி ஆர்ட்டின் சுவாரஸ்யப் பின்னணி
இந்த ‘கிப்லி ஆர்ட் (Ghibli)’ என்ற சொல் அரபிக் மொழியிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. அரபிக் மொழியில் இதை ‘கிப்லி’ என்று உச்சரிக்கிறார்கள்.
இதற்கு சஹாரா பாலைவனக் காற்று என்று அர்த்தம். ‘Caproni Ca.309 Ghibli’ என விமானத்திற்கும் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பானில்தான் இந்த கிப்லி ஆர்ட் பிரபலமாகிறது. அங்கு இதை ‘ஜிப்லி ஆர்ட்’ என்று சொல்கிறார்கள். இப்படி, எப்படி வேண்டுமானாலும் உச்சரித்துக் கொள்ளலாம். சரி, இந்த கிப்லி ஆர்ட் எப்படி உருவானது என்பதுதான் பற்றிப் பார்க்கலாம்.
ஹயோ மியாசாக்கி (Hayao Miyazaki) என்ற பிரபல ஜப்பானிய இயக்குநர்தான் இந்த கிப்லி ஆர்ட்டின் OG, ஒரிஜினல் கிரியேட்டர். இவரின் தந்தை மியாசாக்கி என்ற பெயரில் விமானங்களைச் சொந்தமாக வைத்திருந்தவர்.
இரண்டாம் உலகப்போரில் ஜெட் விமானங்களுக்கு ஸ்டேரிங் வீல் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரண்டு வயதாக இருக்கும்போதே ஹயோ மியாசாக்கிப் பறக்கும் விமானங்கள் மேலும், பரந்த ஆகாயத்தின் மேலும் காதல் கொண்டார்.
சிறுவயதில் தான் விமானம் ஓட்டுவதுபோலவும், ஆகாயத்தில் பறப்பது போன்றும் கற்பனை கண்டு, அதை ஓவியமாக வரைந்துள்ளார்.
அதிலிருந்து வந்த ஆர்வத்தில்தான் அவர் ஜூன் 15, 1985ம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து ‘Studio Ghibli’ என்ற அனிமேஷன் நிறுவனத்தை ஜப்பானில் தொடங்கி கிப்லி ஆர்ட்டை உருவாக்கி, அதைத் திரைப்படமாக எடுத்தார்.
ஹயோ மியாசாக்கி தன் கனவுகளுக்கும், எல்லையில்லா கற்பனைகளுக்கும் கலை வடிவம் கொடுத்து, கிப்லி ஆர்ட் அனிமேஷனாக மொழிபெயர்த்துப் பல திரைப்படங்களை இயக்கினார்.
கிப்லி ஆர்ட் ஸ்டைல் திரைப்படங்கள்
‘My Neighbor Totoro’, ‘Princess Mononoke’, ‘Howl’s Moving Castle’ எனப் பல திரைப்படங்கள் பார்வையாளர்களை வியக்க வைத்த திரைப்படங்களாகும்.
2003ம் ஆண்டு ஹயோ மியாசாக்கி எடுத்த திரைப்படமான ‘Spirited Away’ சிறந்த அனிமேஷ்ன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. இப்போது அவருக்கு 84 வயதாகிறது,
சமீபத்தில்கூட ‘The Boy and the Heron (2023)’ என்ற கிப்லி ஆர்ட் ஸ்டைல் அனிமேஷன் திரைப்படத்தை எடுத்திருந்தார்.
மனங்களைக் கவரும் கிப்லி ஆர்ட் ஸ்டைல்
CGI, VFX எனப் பல அனிமேஷன் தொழில்நுட்பங்கள் வந்து, தத்ரூபமாக எதையும் திரையில் உருவாக்கினாலும், கிப்லி ஆர்ட் அனிமேஷனுக்கு ஒரு மவுசும், அதற்கென ரசிகர்கள் கூட்டமும் எப்போதும் இருக்கிறது.
கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்து, மெல்லிய கலர்களில், உலகையே எல்லையில்லா கற்பனையில் அனிமேஷனாக காண வைக்கும் அந்த கிப்லி ஆர்ட் எவரையும் கவர்ந்து ஈர்த்துவிடும்.
இப்போது ஒரே கிளிக்கில் சாதாரண டிஜிட்டல் போட்டோவை நொடிப் பொழுதில் கிப்லி ஆர்ட் ஸ்டையிலில் மாற்றிவிடுகிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
ஹயோ மியாசாக்கி 1980ம் ஆண்டு கால கட்டங்களில் கார்ட்டூன் கதாபாத்திரங்களையும், அதன் ஒவ்வொரு அசைவையும் வரைந்து, அதைச் சுற்றியுள்ளவற்றின் ஒவ்வொரு அசைவையும் வரைந்து தனது கற்பனைகளுக்குப் பல ஆயிரம் அசைவு கொடுத்து, ஒரு காட்சியை உருவாக்கினார்.
அப்படி ஆயிரம் ஆயிரம் அசைவுகளை உருவாக்கி, அதை முழுத் திரைப்படமாக உருவாக்கினார். அவரின் எல்லையில்லா, வற்றாத கற்பனைகள்தான் திரைப்படங்களாக உருவாகின. பல ஆயிரம் கற்பனைகளைக் கொட்டி ஒரு காட்சியை உருவாக்கியிருப்பார்.
“மனிதனின் இந்த எல்லையற்ற, வற்றாத கற்பனை வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதுதான் இந்த செயற்கை நுண்ணறிவு. அதை மனிதன் என்றும் இழந்துவிடக்கூடாது” என்று சமீபத்திய நேர்காணலில் ஹயோ மியாசாக்கி கூறியிருந்தார்.
திடீரென ட்ரெண்ட் அடித்திருக்கும் இந்த கிப்லி ஆர்ட் ஸ்டைல் போட்டோக்களை உருவாக்கப் பல AI செயலிகள் உருவாகி வருகின்றன.
இதில் பிரபலமாக இருப்பது Chat GPT, Grok செயலிகள். செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பை உறுதி செய்து இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்துங்கள்.