இன்று ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று ஆரம்பித்து, டிசம்பர் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இம்முறை பரீட்சைக்காக நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 525 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் பாடசாலை விண்ணப்பதாரர்கள்: 246,521 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள்: 94,004 பேரும் அடங்கியுள்ளனர்
பரீட்சைகளை இலகுவாக நிர்வாகம் செய்வதற்காக, நாடு முழுவதும் 325 ஒருங்கிணைப்பு நிலையங்களும், அத்துடன் 32 பிராந்தியங்களில் சேகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (Disaster Management Centre) இணைந்து பரீட்சைகள் திணைக்களம் ஒரு சிறப்பு கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம், எந்தவொரு சிரமமும் இன்றிப் பரீட்சை நடவடிக்கைகள் நடைபெறும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்