இப்போது இருப்பதைவிட இன்னுமும் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இல்லா மனிதனே இருக்க மாட்டான். புத்தகக் கண்காட்சிகளில் நொறுக்குத்தீனிகளுக்கு அடுத்து அதிகம் விற்கப்படுவது சுயமுன்னேற்ற நூல்கள்தான். இன்றைய சமூக ஊடக காலகட்டத்தில்கூட சுயமுன்னேற்றம் தொடர்பான வீடியோக்கள்தான் சமையல் குறிப்பு வீடியோக்களுக்கு அடுத்து பிரபலமானவை. ஆனாலும் பலருக்கும் அது ஆசை என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. ஏன் ஒரு சிலர் மட்டும் வெற்றியடைகின்றனர்? இந்தக் கேள்விக்கு விடை தேடப் பலரும் முனைகின்றனர்.
முதலில் உண்மையான சுயமுன்னேற்றம் என்றால் என்ன? ‘கோடரியைக் கூர்மை செய்’ (Sharpen the axe) எனச் சொல்வது போல் எந்தத் துறையாக இருந்தாலும் நமது அடிப்படைத் திறமைகளை (Core skills) முன்னேற்ற வேண்டும். அதுதான் உண்மையான சுயமுன்னேற்றம். எப்படி வெற்றி பெறுவது என்பதைவிட, எப்படித் திறமைகளை வளர்த்துக்கொள்வது என்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
‘பிறவித் திறமை என்பதற்குப் பெரிய பங்கு எதுவும் கிடையாது’ என்பதைத்தான். ஒரு சில விஷயங்கள் ஒருசிலருக்குத்தான் வரும் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது தவறான கருத்து. திறமைசாலிகள் பலரும் முயற்சி செய்தே திறமைகளை அடைகின்றனர். அவர்களுக்கு அவர்கள் நிபுணத்துவம் பெற்ற விஷயம் எளிதாக வருவது அவர்களின் பயிற்சி / முயற்சியினாலேயே. அவர்கள் எளிதாகச் செய்வதால் அது இயற்கை அளித்த கொடை என நாம் தவறாக நினைக்கிறோம்.
இதைத் தொடர்ந்து, ‘ஒரு துறையில் பத்தாயிரம் மணி நேரம் பயிற்சி இருந்தால் அதில் நிபுணராகலாம்’ என்ற கருத்தாக்கம் புகழ்பெற்றது. இந்தக் கருத்தை உருவாக்கிய ஆண்டர்ஸ் எரிக்ஸன் (Anders Ericsson) என்னும் உளவியலாளர், பல சாதனையாளர்களைப் பல்லாண்டுகள் ஆராய்ந்து இந்தக் கருத்தை முன்வைத்தார். ஆனால், ‘பத்தாயிரம் மணி நேரம் சாதாரணமாகப் பயிற்சி செய்வது திறமையை உருவாக்காது. தன்முனைப்புள்ள பயிற்சி (Deliberate Practice) அவசியம்’ என்கிறார்.
நம் மனம் அலைபாயக் கூடியது. அதிலும் இந்த இணையதள காலகட்டத்தில் பல்வேறு தூண்டுதல்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நாம் மேலோட்டமாக இல்லாமல் ஆழமான உழைப்பைக் (Deep work) கொடுக்க வேண்டும். எல்லாத் திறமைகளையும் போலவே இதற்கும் நாம் பயிற்சி செய்ய வேண்டும். பெரும்பாலும் ஒரு விஷயத்தில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது நாற்பது நொடிகளுக்குள் நமது கவனம் சிதறுகிறது. ஆனால் ஆய்வுகளின் படி ஒரு விஷயத்தில் ஈடுபட ஆரம்பித்து இருபது நிமிடங்கள் கழித்துத்தான் அதில் முழுக்கவனமும் ஏற்படுகிறது. ஆனால் பல சமயங்களில் அதற்குள் நாம் திசை மாறிவிடுகிறோம். அப்படித் திசைமாறாமல் சூழலை எல்லாம் மறந்து நேரம் போவதே தெரியாமல் முழுக் கவனத்தையும் நாம் செய்யும் வேலையிலேயே குவிப்பதை ‘ஃப்ளோ’ (Flow) என்கிறார்கள். அப்படி ஆழ்ந்த கவனத்தோடு வேலை செய்யும்போது மூளை நரம்பிணைப்புகள் வலுவடைகின்றன. அந்தச் செயலில் திறமைசாலிகள் ஆகிறோம்.
சலிப்பில்லாமல் நீண்ட காலம் ஒரு செயலைச் செய்ய விடாப்பிடித்தனம் தேவை (Grit). இந்த க்ரிட் என்ற கருத்தை வலியுறுத்திய ஏஞ்சலா டக்வொர்த் (Angela Duckworth) கீழ்க்காணும் நான்கு விஷயங்கள்தான் வெற்றியின் நான்கு தூண்கள் என்கிறார்.
1. பயிற்சி (Practice)
2. ஆர்வம் (Passion)
3. விடாப்பிடியான நம்பிக்கை
(Persistence hope)
4. நோக்கம் (Purpose).