திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு வெற்றிடமாகியுள்ள அந்தச் சமயப் பொறுப்பிற்காக புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரப்பூர்வ தேர்தல், எதிர்வரும் மே 7ஆம் திகதி வத்திக்கானில் நடைபெறும் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில், 135 தகுதி பெற்ற கார்டினல்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களில், ஐரோப்பாவில் இருந்து 53, ஆசியாவில் இருந்து 23, வட அமெரிக்காவிலிருந்து 20, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து முறையே 18 மற்றும் 17 பேர், ஓசியானியாவிலிருந்து நான்கு பேர் என 71 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
80 வயதுக்கு கீழ்பட்ட கார்டினல்களே வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கானின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, உலகின் மிக ரகசியமான தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வெளியுலகத்துடன் எந்தவொரு தொடர்பும் இன்றி, தவக்கால சூழலில் நடத்தப்படும் இந்த சடங்குக்காக, சிஸ்டைன் தேவாலயம் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
வாக்களிப்பிற்குப் பிறகு, கார்டினல்கள் பயன்படுத்தும் வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படுவதும், அதன் புகை வழியாகவே வெளியுலகத்திற்கு திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் தெரியப்படுத்தப்படுவதும் பாரம்பரியமாக தொடர்கின்றன.
முழு வாக்குகளைப் பெற்ற திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை எழுவதால், புதிய திருத்தந்தை தெரிவானது என அறிவிக்கப்படும்.