Thayagam Tamil Radio Australia

முல்லைத்தீவில் வயோதிப பெண் வெட்டிக்கொலை – பகுதி மக்கள் அதிர்ச்சி

August 23, 2025

Spread the love

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வாழ்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, ராமசாமி ராமயி என்ற மூதாட்டி, நேற்று (22) மாலை அவரது இல்லத்தில் சடலமாக கிடப்பதை அப்பகுதி கிராம மக்கள் கண்டறிந்து, மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இன்று (23) காலை கிளிநொச்சி தடயவியல் பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை சட்டப்படி மேலதிக விசாரணைக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூதாட்டியின் நகை உள்ளிட்ட பொருட்களை களவாடும் நோக்கத்துடன் இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.