“இந்த வருட வரவு செலவு திட்டத்தில், நாய்கள் உட்பட விலங்குகளின் நலனுக்காகப் பெரிய அளவிலான மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் உள்ள இளம் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு வைத்தியர்களைத் தக்க வைத்துக் கொள்ளவோ அல்லது அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கோ எந்தவிதமான விசேட ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை,” என்று மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், சிறப்பு வைத்தியர் சாமல் சஞ்சீவ தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள், கிராமப்புற வைத்தியசாலைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை, இரவு பகல் பாராமல் அயராது உழைப்பதன் மூலமே இலங்கையின் ஆரம்ப சுகாதாரக் குறியீடுகள் சர்வதேச தரத்தில் பேணப்பட்டு வருகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“அவ்வாறு உழைக்கும் எமது நலனில் இந்த முறை சிறப்பான கவனம் செலுத்தப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு சிறிய நிவாரண நடவடிக்கை கூடக் கிடைத்திருந்தால் அதையும் நாங்கள் பாராட்டியிருப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.