கிளிநொச்சி மாவட்டத்தின் ரமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுடலைக்குளம் பகுதியில், சட்டவிரோத மதுபானச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கி, பொலிஸாரின் பிடியில் இருந்த சந்தேகநபர் ஒருவரை விடுவித்து அழைத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களை ரமநாதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு நடவடிக்கை குறித்துக் கிடைத்த தகவலின் பேரில் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுற்றிவளைப்பின் போது, இரும்புக் கம்பிகள் மற்றும் மரத்தடிகள் சகிதம் அங்கு குழுமிய ஒரு குழுவினர், கடமையில் இருந்த விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஒரு சந்தேகநபரை விடுவித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் தற்போது கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட ரமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், தாக்குதலுடன் தொடர்புடைய ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண்களின் வயது 16 முதல் 32 வரையிலும், பெண்களின் வயது 26 முதல் 45 வரையிலும் காணப்படுவதுடன், இவர்கள் அனைவரும் ரமநாதபுரம் பகுதியின் வதிவிடவாசிகள் ஆவர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதுடன், கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.