Thayagam Tamil Radio Australia

2025 முதல் 6 மாதங்களில் வீதி விபத்துகளில் சுமார் 2,000 பேர் உயிரிழப்பு – பொலிஸ் விசேட எச்சரிக்கை

June 20, 2025

Spread the love

2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் 15 வரை, இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், மொத்தம் 1,133 உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், கடந்த ஆண்டை விட இந்த வருடம் விபத்துக்களின் தீவிரமும், தாக்கமும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

வாகனங்களில் தேவையற்ற உதிரிப் பாகங்களை பொருத்துவது, வீதிகளில் பயணிக்கும் தகுதியற்ற வாகனங்கள், மற்றும் ஒழுங்கற்ற சாரதிகள் ஆகியவை விபத்துக்களுக்கு முக்கியக் காரணங்களாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “ஒவ்வொரு காலையும் பணிக்காக வீட்டிலிருந்து வெளியேறும் 7 பேரில் ஒருவர் உயிரற்ற உடலாகவே வீடு திரும்பும் நிலை உருவாகியுள்ளது” என கவலை தெரிவித்தார்.

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், 2025 ஜூலை 1ஆம் திகதியிலிருந்து வாகனங்களில் பொருத்தப்பட்ட தேவையற்ற உதிரிப் பாகங்களை கட்டாயமாக அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.