நல்லூர் ஆலய தேர் திருவிழா நிகழ்வின்போது, பக்தர்களின் நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர் திருவிழாவில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளம் பெண்ணை சாரணர்கள் கவனித்தனர். பின்னர், அவர் ஒரு பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுக்க முயன்ற வேளையில் உடனடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட யுவதியை சோதனையிட்டபோது, அவரது உடைமையில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன. விசாரணைகளில், யுவதியார் கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என்பதும், மேலும் சில நபர்களுடன் ஆலயத்திற்கு வந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
யுவதியுடன் வந்த ஏனையவர்களைப் பற்றியும் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, தேர் திருவிழா நாளில் தமது நகைகள் திருடப்பட்டதாக மொத்தம் எட்டு பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிசார், திருவிழா பாதுகாப்பில் ஈடுபட்டு யுவதியை கையும் களவுமாக பிடித்த சாரணர்களின் விழிப்புணர்வையும் துணிச்சலையும் பாராட்டியுள்ளனர்.