யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோருக்கு ரிக் ரொக் வீடியோக்கள் மூலம் வெளிநாட்டு ஆசையை தூண்டி , பணத்தினை கொள்ளையிட்டு வந்த கும்பலின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்லாந்தில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடத்தி, அவரது வங்கி கணக்கில் இருந்த 80 இலட்ச ரூபாயை மிரட்டி , வேறொரு வங்கி கணக்குக்கு மாற்றி, இளைஞனின் பணத்தினை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளில் அடிப்படையில், ஏற்கனவே பெண் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் , வெளிநாடு தப்பி செல்ல முற்பட்ட ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது,
யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்லார்ந்து நாட்டில் வசிக்கும் நபர் ரிக் ரொக் தளத்தில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான விசா ஒழுங்குகளை செய்து தருவதாகவும் , வங்கியில் நிலையான வைப்புக்கள் இல்லாதவர்களுக்கு , அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக விளம்பர காணொளிகளை பதிவேற்றியுள்ளார்.
அதனை நம்பி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் சுவிஸ்லார்ந்தில் உள்ளவரை தொடர்பு கொண்ட போது, ஆவணங்களை யாழில் உள்ள நபர் ஒருவரிடம் கையளிக்குமாறு , கூறியுள்ளார்.
அவரை நம்பி ஆவணங்களை கையளிக்க சென்ற போதே இளைஞனை கடத்தி சென்று மிரட்டி , அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தினை தமது கணக்குக்கு மாற்றியே 80 இலட்ச ரூபாயையும் கொள்ளையடித்துள்ளனர்.
அதன் பின்னரே , தமது கணக்கு இலக்கங்களுக்கு பணத்தினை மாற்றினால் தாம் அகப்பட்டு கொள்வோம் என அறிந்து , வெளிநாடு செல்வதற்காக அந்நாடுகளுக்கு வங்கி கணக்கில் காட்ட வேண்டிய தொகையை , தாம் வைப்பிலிட்டு காண்பிக்கிறோம் என கூறி பெற்றுக்கொண்ட வங்கி கணக்குகளுக்கு , மாற்றி அவர்களிடம் இருந்து பணமாக பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அவ்வாறு செய்வதற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுமார் 50 பேரிடம் தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவற்றினை எல்லாம் சுவிஸ்லார்ந்தில் உள்ள நபரே வழி நடத்தி வந்துள்ளார். என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வங்கியில் பணம் இல்லாது வெளிநாடு செல்லும் நோக்குடன் குறித்த கும்பலிடம் தமது வங்கி உள்ளிட்ட தரவுகளை வழங்கியவர்கள் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏனெனில், கைது செய்யப்பட்டவர்களை விட அந்த கும்பலை சேர்ந்த வேறு சிலர் இன்னமும் கைது செய்யப்படாமல் இருப்பதினால் , அவர்கள் யாரையும் கடத்தி , உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தினை மாற்றி , அதனை உங்களிடம் இருந்து பணமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு செய்யப்பட்டால் , நீங்களும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் என கைது செய்யப்படலாம். அதனால் , அவ்வாறு தமது வங்கி தகவல்களை வழங்கியவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.