நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமையினால் பல சிறுவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சூரியவெவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலையின் அதிபர் நெகிழ்ச்சி செயல் ஒன்றை செய்துள்ளார்.
உணவு நெருக்கடி
நமடகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் உணவின்றி வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை பாடசாலை அதிபர் முன்னெடுத்துள்ளார்.
அதற்கமைய, உணவின்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பாடசாலையில் உணவு வங்கியை நடத்தி வருகின்றனர்.
உணவு வங்கி
இங்கு தினசரி பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபரினால் மேலதிகமாக கொண்டுவரப்படும் 3 உணவு பொதிகள் அந்த உணவு வங்கியில் வைக்கப்படுகின்றது.
அதற்கமைய, உணவின்றி வரும் மாணவர்கள் வங்கியில் வைக்கப்பட்டுள்ள உணவு பக்கட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
பாடசாலைக்கு வரும் பல மாணவர்கள் பாடசாலையில் இடம்பெறும் காலை கூட்டத்தின் போது மயங்கி விழுவதை அடுத்து அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.