சிலந்திகள் (Spiders) பொதுவாக பாறை இடுக்குகள், குகைப்பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகள் என பலதரப்பட்ட இடங்களில் வாழும் இயல்புடையவைகளாக உள்ளன. சிலந்திகள் இனத்தில் சில வகையான சிலந்திகள் வளைக்குள் வசிக்கின்றன. உல்ப் சிலந்திகள் வலையைப் பின்னுவதில்லை. இவை பூமியில் குழிகளைத் தோண்டி அதற்குள் வசிக்கின்றன. சிலந்திகளில் சுமார் 35000 வகைகள் உள்ளன.
சிலந்திகளுக்கு எட்டு கண்கள் அமைந்துள்ளன. சிலந்தியின் இதயமானது ஒரு குழாய் வடிவத்தில் அமைந்துள்ளது. சிலந்திகளின் இரத்தமானது நீல நிறத்திலே இருக்கும். நம்முடைய இரத்தத்தில் சிவப்பணுக்கள் காணப்படுகின்றன. ஆனால் சிலந்தியின் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் காணப்படுவதில்லை.
சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் ஆறு நூல் சுரப்பிகள் அமைந்துள்ளன. இதிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமானது நுண்ணிய துளைகளின் வழியாக வெளியேறுகிறது. இந்த திரவமானது காற்று பட்ட உடன் கடினமாகும் தன்மை உடையது. இச்சுரப்பிகளின் மூலம் இவை ஒருவித நூலை உற்பத்தி செய்து வலைகளைப் பின்னுகின்றன. சிலந்திகள் உருவாக்கும் இத்தகைய நூலானது புரோட்டீன்களால் ஆனது.
சிலந்திகளின் கால்களின் முனைகளில் மூன்று கூரிய நகங்கள் அமைந்துள்ளன. இந்த மூன்று நகங்களில் நடுநகத்தில் சிறிய முடிகள் அமைந்துள்ளன. சிலந்திகள் தங்கள் வலைகளில் நகர்ந்து செல்ல நடுவில் உள்ள நகத்தையே பயன்படுத்துகின்றன.