ஹம்முராபி.
சுமார் 3,800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாங்கு வாழ்ந்த மாமன்னர். தந்தையை அடித்துத் துரத்திவிட்டு அமோரிட் நாட்டின் அரியணையைக் கைப்பற்றிய உத்தமபுத்திரர். வெறும் 50 சதுர மைல் பரப்பளவு கொண்ட ராஜ்ஜியத்தின் ராஜாவாகத்தான் தொழிலை ஆரம்பித்தார். தன் வீரத்தாலும் சாதுரியத்தாலும் மெசோபடோமியாவின் பல்வேறு பகுதிகளை வென்று, முதலாம் பாபிலோனியப் பேரரசைக் கட்டியெழுப்பிய பாபிலோனிய பல்வாள் தேவனாக வரலாற்றில் நின்றார். அன்னாரது ஆட்சிக்காலம் கி.மு. 1792 முதல் கி.மு. 1750 வரை.
வெவ்வேறு பிரதேசங்களைக் கைப்பற்றி, வேறு வேறு மொழி பேசும் மக்களை அடக்கியாள்வது எவருக்கும் கடினமான விஷயம்தான். ஆகவே ஹம்முராபி, தன் பேரரசின் எல்லா பகுதிகளுக்கும் நிபுணர்களை அனுப்பினார். எங்கெங்கே, என்னென்ன மாதிரியான சட்டங்களெல்லாம் புழக்கத்தில் இருக்கின்றன என்று திரட்டினார். அவற்றையெல்லாம் ஆராய்ந்து, வெட்டி, ஒட்டி, திருத்தம் செய்து, கூடுதலாகத் தனது அனுபவ மசாலாவைச் சேர்த்து, பாபிலோனியப் பேரரசு முழுமைக்குமான புதிய சட்டத்தொகுப்பை உருவாக்கினார்.
இதுவே நமக்குக் கிடைத்திருக்கும், மனிதக் குல வரலாற்றின் மிகப் பழைமையான முதல் சட்டத் தொகுப்பு. ஹம்முராபியின் முழுமையான சட்டங்கள் செதுக்கப்பட்ட கல்வெட்டு, கி.பி. 1902ல் பிரெஞ்சு தொல்லியல் ஆய்வாளர்களால் ஈரானின் சுஸா நகரில் கண்டறியப்பட்டது. (தற்போது பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது.)
நம் ஆள்காட்டி விரல் வடிவிலான, ஏழு அடி நான்கு அங்குலம் உயரமுள்ள கல் ஒன்றில், அக்காடியன் (Akkadian) மொழியில் இவை செதுக்கப்பட்டுள்ளன. வணிகம், அடிமைகள், திருட்டு, வேலை, விவசாயம், விவாகரத்து, குடும்பம், சமூகம் என்று பல்வேறு பிரிவுகளில் 282 சட்டங்களை ஹம்முராபி அருளியிருக்கிறார்.
‘இந்த மண்ணைத் தீய சக்திகளிடமிருந்து காக்கவும், ஏழைகளை அநியாயங்களிலிருந்து பாதுகாக்கவும், கடவுளர்கள் என்னைத் தேர்ந்தெடுத்து இந்தச் சட்டங்களை அருளினர்’ என்று ஹம்முராபியே இந்தச் சட்டத் தொகுப்புக்கு முன்னுரை கொடுத்துள்ளார். இதைக் காப்பி பேஸ்ட் செய்துதான் அவருக்குப் பின்வந்த பல்வேறு ஆட்சியாளர்கள் நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர் என்கிறது வரலாறு. சரி, ஹம்முராபியின் சட்டங்களில் அப்படி என்ன சிறப்பு?
புயலா, மழை பொய்த்துவிட்டதா, இன்ன பிற காரணங்களால் அந்த ஆண்டில் விளைச்சல் இல்லையா? விவசாயக் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டாம். கடன் கொடுத்தவர்கள் தம் கடன் பட்டியலை அழித்துவிட வேண்டும்.
ஒரு பெண் தன் கணவனோடு வாழ விருப்பமில்லை என்று தெரிவித்தால், கணவனும் அதற்குச் சம்மதித்துவிட்டால், அந்தப் பெண் தன்னுடைய தந்தை வீட்டிலிருந்து வரதட்சணையாகக் கொண்டு வந்த பொருள்களையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டுக் கிளம்பி விடலாம்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண் காணாமல் போய்விட்டாலோ, கடத்தப்பட்டுவிட்டாலோ, அவனுடைய குடும்பத்தை உற்றார், உறவினர்கள் தக்க உதவிகள் செய்து காப்பாற்ற வேண்டும்.
ஒரு நீதிபதி சொன்ன தீர்ப்பு தவறு என்று பின்பு கண்டறியப்பட்டால், அவருக்கு 12 மடங்கு அபராதத் தொகை விதிக்கப்படும். பதவி நீக்கத் தண்டனையும் உண்டு.
ஒருவன் மீது ஒரு குற்றம் சாட்டப்படுகிறது. தன்னை நிரபராதி என நிரூபிக்க இயலாத அவனை, ஆற்றின் ஆழமான பகுதியில் தள்ளிவிடுவார்கள். அவன் மூழ்கிச் செத்துவிட்டால், அக்மார்க் குற்றவாளி. அவனுடைய வீடு, குற்றஞ்சாட்டியவனுக்குச் சொந்தமாகிவிடும். நீந்தி மேலேறி வந்துவிட்டால் அவன் நிரபராதி. குற்றஞ்சாட்டியவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அவன் வீடு, தப்பித்தவனுக்குச் சொந்தமாகிவிடும்.
ஒரு மேஸ்திரி கட்டிக்கொடுத்த வீட்டின் சுவர் இடிந்துவிட்டால், அதை அவரே தன் செலவில் சரிசெய்து தர வேண்டும். சுவர் இடிந்து வீட்டுக்காரன் செத்துப் போனால், மேஸ்திரிக்கு மரணதண்டனை. சுவர் இடிந்து வீட்டுக்காரனின் மகன் செத்துப் போனால், மேஸ்திரியின் மகனும் கொல்லப்படுவான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி காலி; இல்லையேல் குற்றம் சுமத்தியவனுக்கு உயிர் இருக்காது.