கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கில் பெண் சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகளால் அவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீர்கொழும்பு பொலிஸில் கடமையாற்றும் 26 வயதுடைய பாதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிளின் மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேக நபரின் எண்ணையும் CCD அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ புதன்கிழமை (19) காலை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இலக்கம் 05 நீதிவான் நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்டு வந்த நபர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.