Thayagam Tamil Radio Australia

தடுப்புக்காவலின் போது 49 மரணம் – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிர்ச்சி தகவல்

May 20, 2025

Spread the love

2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 மே 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கை காவல்துறையின் தடுப்புக் காவலின்போது மொத்தம் 49 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் எல்.டி.பி. தெஹிதெனிய தெரிவித்தார்.

இவற்றில் 30 மரணங்கள், சந்தேக நபர்களும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான சம்பவங்கள் மேல் மாகாண காவல் நிலையங்களில் இடம்பெற்றுள்ளன.

மனித உரிமை மீறல்கள் என இந்த மரணங்களைத் தள்ளிச் செல்ல முடியாது என்றும், தடுப்புக் காவலில் இருப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பது என்பது காவல்துறையின் பொறுப்பு எனவும் தெஹிதெனிய வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு நபருக்கும் உயிர்வாழும் உரிமை உண்டு. சந்தேக நபர் குற்றவாளி என்பதை நிரூபிப்பது நீதிமன்றத்தின் பணியாகும். ஆனால் அந்த நபர் உயிருடன் நீதிமன்றம் செல்லவேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டல் மற்றும் பரிந்துரைகள் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை பின்பற்றப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.