Thayagam Tamil Radio Australia

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் -32

September 22, 2022

சட்டவிரோதமாக ஆழ்கடல் மீன்பிடி படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த மே 27 ஆம் திகதி இலங்கையின் வென்னப்புவை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தனர். 23 பேர் கொண்ட இந்த இலங்கையர்களில் பெண் ஒருவரும் அடங்குகிறார்.

இவர்கள் நீர்கொழும்பு கொஸ்வாடி மற்றும் மூதூர் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் சென்ற ஆழ்கடல் மீன்பிடி படகு அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் முன்னர் அந்நாட்டு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

படகில் இருந்தவர்கள் நேற்றிரவு கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக செல்வோர் கிறிமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள்

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வரும் நபர்களை கைது செய்து, கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைப்பதில்லை எனஅவுஸ்திரேலிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று அதிகாலை 3.50 அளவில் அவுஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான விமானத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் வந்திருந்த 50 பேரை கொண்ட அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினரிடம் இருந்து இலங்கையர்களை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள், அவர்களை விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.